திருவாரூர்: தனியார் ஸ்கேன் மையத்தில் ஊசி செலுத்திய பெயிண்டர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்
திருவாரூர்: திருவாரூரில் ஸ்கேன் எடுப்பதற்காக வந்த பெயிண்டருக்கு ஊசி செலுத்திய நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தொழில்முறை பெயிண்டர் ஆவார். இவருக்கு காலில் ஏற்பட்ட நரம்புச் சுருட்டல் பாதிப்பு காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்திற்குத் தனது மகளுடன் ரவிச்சந்திரன் சென்றுள்ளார்.
அங்கு ஸ்கேன் எடுப்பதற்கு முன்னதாக, மருத்துவப் பணியாளர் அவருக்கு ‘டெஸ்ட் ஊசி’ (Test Injection) செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊசி செலுத்திய அடுத்த சில நிமிடங்களிலேயே ரவிச்சந்திரனுக்குத் தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்தத் தகவலறிந்த ரவிச்சந்திரனின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, ஸ்கேன் மையத்தின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அந்த மையத்தை முற்றுகையிட்டனர். மேலும், நியாயம் கேட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.