ஓசூர் அருகே பரபரப்பு: போலீஸ் எனக்கூறி பெண் வியாபாரியை துப்பாக்கியால் மிரட்டிய போலி ஆசாமி கைது!
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் வியாபாரி ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போலி போலீஸ்காரரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
ஓசூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தா என்பவர், பாகலூர் சாலையில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.
அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த முத்தா, பதற்றமடையாமல் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், தனது செல்போனை எடுத்து அந்த நபரை வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். துணிச்சலாகச் செயல்பட்டு போலி ஆசாமியை அடையாளம் காட்டிய பெண் வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.