மானாமதுரை: மருத்துவமனையில் மதுபோதை இளைஞர் ரகளை – சிகிச்சையை மறுத்து அடாவடி!
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நோயாளிகள் மற்றும் செவிலியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
மானாமதுரை பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், இன்று தனது மகளுடன் அருகே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு கைக்கலப்பாக மாறியது. இதில் ஆனந்தனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ரகளை:
மருத்துவமனைக்கு வந்த ஆனந்தன் கடும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் செவிலியர்கள் முற்பட்டபோது, சிகிச்சையை ஏற்க மறுத்த ஆனந்தன், திடீரென ரகளையில் ஈடுபடத் தொடங்கினார். மருத்துவமனை ஊழியர்களை ஒருமையில் பேசியதுடன், அங்குள்ள உபகரணங்களையும் சேதப்படுத்தும் வகையில் அதிரடியாக நடந்து கொண்டார்.
தலையில் ரத்தம் வடிந்த நிலையிலும், போதை தலைக்கேறிய நிலையில் அவர் செய்த அடாவடியால் மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் அச்சமடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்த மானாமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை எச்சரித்துக் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.