பெரியகுளம்: பட்டியலின இளைஞர் கொலை வழக்கில் அதிரடித் தீர்ப்பு – பெண் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பட்டியலின இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு பெண் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் எண்டப்புளி கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தகராறைக் கேள்விப்பட்டு, அதனைச் சமரசம் செய்து வைப்பதற்காகப் பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த அங்கம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் முருகனை வழிமறித்துக் கடுமையானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தொடரப்பட்ட வழக்கு, தேனி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில், முருகன் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அங்கம்மாள் உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தண்டனை பெற்ற 7 பேருக்கும் தலா 6,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஓரளவிற்கு ஆறுதலை அளித்துள்ளது.