இணையத்தை ஆளும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன் சர்ப்ரைஸ்!
தொழில்நுட்பம்: இணையவாசிகளின் தற்போதைய செல்லப் பிள்ளையாக உருவெடுத்துள்ள ஜப்பானிய குரங்கு குட்டி ‘பஞ்ச்’-ஐக் கொண்டாடும் விதமாக, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான அனிமேஷன் ஐகான்களை (Animated Icons) அறிமுகப்படுத்தி இணையத்தைப் அதிர வைத்துள்ளது.
ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச் குன்’ எனும் இந்தக் குரங்கு குட்டி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறந்த சில நாட்களிலேயே அதன் தாயால் கைவிடப்பட்டது. தாய் அன்பை இழந்த இந்தக் குட்டியை பூங்கா ஊழியர்களே 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வருகின்றனர். மற்ற குரங்குகளால் தொடர்ந்து விரட்டப்படும் நிலையில், பஞ்ச் குட்டி பயந்து ஓடித் தனக்கு ஒரே ஆறுதலான தனது ஆரஞ்சு நிற குரங்கு பொம்மையைக் கட்டியணைத்துக் கொள்ளும் வீடியோ அண்மையில் வெளியாகி உலக அளவில் பலரது இதயங்களைத் தொட்டது.
தற்போது நெட்டிசன்களின் ‘ஃபேவரைட்’ ஆக மாறிப்போன இந்த வைரல் குரங்கு குட்டியை கௌரவிக்கும் வகையில், கூகுள் தேடுபொறியில் (Google Search) சிறப்பு அனிமேஷன் ஐகான்களை வெளியிட்டுள்ளது. கூகுளின் இந்த க்யூட் சர்ப்ரைஸ், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.