விழுப்புரம்: பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுகவினர் – போலீசில் புகார்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபெற்ற பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளரை திமுகவினர் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள மேலமங்கலம் கிராமத்தில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகத் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த இருவர் திடீரென ராதாகிருஷ்ணனின் பேச்சை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு, உடல்ரீதியாகத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது. இச்சம்பவம் குறித்து பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.