தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேண்டி திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் ‘வெள்ளி வேல்’ பூஜை!
மதுரை: நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டியும், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டும் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாஜகவினர் சிறப்பு ‘வேல் பூஜை’ நடத்தினர். பாஜக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் திரண்ட ஏராளமான கட்சியினர், முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படும் ‘வெள்ளி வேல்’ வைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் கோயிலில் பூஜிக்கப்பட்ட இந்த வெள்ளி வேலானது, பின்னர் அந்தத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமக் கோயில்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தலைவர் சிவலிங்கம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இந்த விசேஷ பூஜை செய்யப்பட்ட வெள்ளி வேலினைப் பரிசாக வழங்குவதற்காகவே இந்த வழிபாடுகள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.