இந்தியாவிலேயே உயரமான 32 அடி நடுகல்: குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் அதிரடி ஆய்வு!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையம் பகுதியில், இந்தியாவிலேயே மிக உயரமானதாகக் கருதப்படும் 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பனை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைத் தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்தும் நோக்கில், இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் ஆரவல்லி, “ஈரோடு கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வரலாற்று ஆவணங்களை விடவும், குமரிக்கல்பாளையத்தில் மிக முக்கியமான மற்றும் கூடுதல் சான்றுகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார். இந்த 32 அடி உயர நடுகல், தமிழர்களின் பண்டைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் இப்பகுதியில் விரிவான அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.