மதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் வழங்கியவர்களுக்கு 2 வாரத்தில் மறுவாழ்வு நிலம் வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகச் சின்ன உடைப்பு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உரிய இழப்பீடு மட்டுமின்றி மறுவாழ்வு நிலமும் வழங்கக் கோரி நிலம் வழங்கிய மக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் உரிய நிலம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிலம் வழங்கிய மக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மறுவாழ்வு நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர். அதே சமயம், கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலிருந்து கிராம மக்கள் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த உத்தரவு விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் நிலவி வந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.