சென்னை: 2 சொகுசு கார்களில் 300 கிலோ குட்கா கடத்தல் – அம்பத்தூரில் சினிமா பாணி வேட்டையில் இருவர் கைது!
சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு இரண்டு சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா) அம்பத்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை அம்பத்தூர் பகுதிக்குச் சொகுசு கார்களைப் பயன்படுத்தி பெருமளவில் குட்கா கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு சந்தேகத்திற்கிடமான சொகுசு கார்களை போலீசார் மறித்துச் சோதனை செய்தனர். சோதனையில், காரின் உட்புறங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பார்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களையும், 300 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சொகுசு கார்களைப் பயன்படுத்தி போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி குட்கா கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.