காரைக்குடி: தேனாறு கரையோரம் துணிகரம் – பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேனாறு கரையோரம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள், எவ்வித அனுமதியுமின்றி மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி – தேவகோட்டை சாலையில் உள்ள சுடுகாட்டுப் பகுதி மற்றும் தேனாறு கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை குறிவைத்த மர்ம கும்பல், நள்ளிரவு நேரத்தைப் பயன்படுத்தி ரகசியமாக வெட்டி லாரிகளில் ஏற்றி கடத்தியுள்ளனர்.
இரவோடு இரவாக மரம் வெட்டப்படுவதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக இது குறித்து செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்கு வருவதை மோப்பம் பிடித்த மர்ம நபர்கள், பிடிபடுவோம் என்ற அச்சத்தில் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டாட்சியர், வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் கடத்தல் நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுக்குச் சொந்தமான இடத்திலிருந்து பல லட்சம் மதிப்பிலான மரங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.