6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், கடந்த சில காலத்திற்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பன்னீர்செல்வத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அதிரடி தீர்ப்பு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.