கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்!
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நடிகர் விஜய் வரும் திங்கள்கிழமை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார். இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருவதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூரிலேயே சந்திக்க விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக அங்குள்ள மண்டபங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் தேவையான மண்டபங்கள் கிடைக்காத காரணத்தால், உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.
தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில், அவர்களை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தாலும், பின்னர் அந்த இடம் மாற்றப்பட்டு, மாமல்லபுரம் போர்பாயிண்ட் தனியார் விடுதியில் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு அக்டோபர் 27-ம் தேதி காலை நடைபெற உள்ளது. 41 பேரின் குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் செலவுகளை தவெக நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜய் அங்கு, ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து உரையாட உள்ளார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அதே தேதியிலேயே (அக்டோபர் 27) அவர்களது குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது விஜய் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்ததுடன், பின்னர் பாதிக்கப்பட்டோருடன் வீடியோ கால் மூலம் உரையாடி, “நேரில் வந்து சந்திப்பேன்” என்று உறுதி அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 18-ம் தேதி, உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும், சட்டரீதியான அனுமதி கிடைத்தவுடன் நேரில் சந்திப்போம் என விஜய் கூறியிருந்தார். அதன்படி, இப்போது அந்த சந்திப்பு நடைபெறுகிறது.