கொடைக்கானலில் ஆமை வேகத்தில் சாலைப் பணிகள்: 6 அடி பள்ளங்களால் மக்கள் கடும் அவதி!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், மேல்மலை கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்கப் பணிகள், தற்போது அவர்களுக்குப் பெரும் இடையூறாக மாறியுள்ளது.
குறிப்பாக, சாலை விரிவாக்கத்திற்காகச் சுமார் ஆறு அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட பள்ளங்கள், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியைக் கடக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் விபத்து அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. மழைக் காலங்களில் இந்தப் பள்ளங்கள் மேலும் அபாயகரமாக மாறும் என்பதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.