திண்டுக்கல் அருகே பரபரப்பு: 100 நாள் வேலை கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி முற்றுகை!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமியை, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கொட்டப்பட்டி, நல்லேந்திரபுரம், குட்டியபட்டி, பொன்மாந்துறை மற்றும் புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இந்த அரசு விழாவில் கலந்துகொண்ட பெண்கள், தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் தனது வாகனத்தில் புறப்படத் தயாரானபோது, அவரைச் சூழ்ந்து கொண்ட பெண்கள் தங்கள் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படவில்லை என ஆவேசமாக முறையிட்டனர். அமைச்சரின் வாகனத்தை மறித்துப் பெண்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததால், சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.