திருவண்ணாமலையில் கோலாகலம்: பவளக்குன்று மலை அடிவாரத்தில் மகா ஆரத்தி சங்கமம்!
திருவண்ணாமலை பவளக்குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் ‘ஆரத்தி சங்கமம்’ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆன்மீக மணம் கமழும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், சமயம் சார்ந்த கருத்தரங்கம், பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்டம் மற்றும் மகா மலை ஆரத்தி சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் அகில இந்திய அளவில் இருந்து திரளான சன்னியாசிகள் கலந்துகொண்டு, அண்ணாமலையார் மலையை நோக்கி மகா தீப ஆராதனைகள் செய்து பக்திப் பெருக்குடன் வழிபட்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பக்திப் பாடல்களுக்கு ஏற்ப பெண்கள் கும்மியடித்து ஆடினர். மேலும், அம்மன் வேடமணிந்த பெண் ஒருவர் பக்திப் பாடல்களுக்கு ஆடிய நடனம் விழாவிற்கு கூடுதல் மெருகூட்டியது. பக்தி மயமான இந்த ஆரத்தி சங்கம நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரின் அருளைப் பெற்றனர்.