ஆர்.டி.ஐ மனுதாரர் விவரம் கசிவு: முறைகேட்டில் ஈடுபட்டவருக்கே உதவிய அரசு அதிகாரி – அதிர்ச்சி ஆடியோ!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விவரம் கோரிய மனுதாரரின் ரகசியங்களை, முறைகேட்டில் தொடர்புடைய நபரிடமே கசியவிட்ட அரசு அதிகாரியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளையார்கோவில் பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தென்னரசு என்பவர் இது தொடர்பான ஆவணங்களைக் கோரி ஆர்.டி.ஐ மூலம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி, சட்டப்படி ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனது பெண் உதவியாளர் மூலம் முறைகேட்டில் தொடர்புடைய நபரைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் உதவியாளர், மனுதாரர் தென்னரசுவின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்ததுடன், “எனது தகவல்களை யாருக்கும் தரக்கூடாது” என ஒரு கடிதத்தை அலுவலகத்தில் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் தரப்பில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அதிகாரிகளே, மனுதாரரின் விவரங்களை முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் கசியவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.