குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை: தாமிரபரணி, கோதையாறு ஆற்றங்கரைகளில் வெள்ள எச்சரிக்கை
கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மழையினால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை எந்நேரமும் உபரிநீர் திறக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் பெய்த மழையால் கடும் குளிர்ச்சியான வானிலை நிலவியது. குலசேகரம், அருமனை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் விழுந்தன. பல இடங்களில் மின்கம்பிகள் சேதமடைந்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். தென்னை சார்ந்த தொழில்கள், செங்கல் சூளைகள், உப்பளங்கள் ஆகியவை செயலிழந்தன. நெல் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டன.
மழை அளவுகளில், கடந்த 24 மணி நேரத்தில் பாலமோரில் 87 மிமீ மழை பெய்தது. பேச்சிப்பாறை, சிற்றாறு-1 அணைகளில் தலா 72 மிமீ, பெருஞ்சாணியில் 69 மிமீ, புத்தன்அணையில் 68 மிமீ, திற்பரப்பில் 58 மிமீ என பல இடங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,286 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; அதில் 492 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கும் 1,597 கனஅடி நீர் வந்துள்ளது.
மழை மேலும் பெய்தால், பேச்சிப்பாறை அணையின் உபரிநீர் கோதையாற்றில் திறக்கப்படும். இது களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, இரயுமன்துறை வழியாக தேங்காப்பட்டினம் கடலுக்கு சென்றடையும்.
இதையடுத்து, தாமிரபரணி மற்றும் கோதையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கன்யாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.