பல்லடம் அருகே பரபரப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகப் பதிவு – 6 வங்கதேசத்தினர் அதிரடி கைது!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்களை, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக டெல்லி ‘க்யூ’ பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் திருப்பூரில் தங்கிப் பணியாற்றி வந்த நிலையில், சமூக வலைதளங்களில் தேச விரோத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, பல்லடம், ஊத்துக்குளி மற்றும் திருமுருகன்பூண்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் டெல்லி க்யூ பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 6 வங்கதேசத்தினர் சிக்கினர். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்கள் யாரேனும் பயங்கரவாதத் தொடர்பில் நேரடியாக இருந்தார்களா அல்லது இணையம் வாயிலாகத் தூண்டப்பட்டார்களா என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.