அடையாற்றில் 40,000 கனஅடி நீர் வந்தாலும் பாதிப்பு இல்லை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெசன்ட் நகர் ஊர்குப்பம் கடல்முகத்துவாரப் பகுதியில் மழைநீர் தங்குதல் இல்லாமல் செல்வதற்கான பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டார்.
அவருடன் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.எம்.எச். அசன் மவுலானா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர்,
“செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் முழு கொள்ளளவு 24 அடி; தற்போது 21.27 அடிவரை நீர் உள்ளது. ஏரியில் உள்ள நீர் படிப்படியாக திறக்கப்படுகிறது. அதேசமயம், அடையாறு ஆற்றங்கரைகள் அகலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரே நேரத்தில் 40,000 கனஅடி அளவு நீர் அடையாற்றில் வந்தாலும் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது,” என அவர் தெரிவித்தார்.