கோவை மக்களை அவமரியாதையாகப் பேசிய தயாநிதி மாறனுக்கு கண்டனம்
திமுக கூட்டத்தில் கோவை மக்களை “பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள்” என அவமரியாதையாகப் பேசிய தயாநிதி மாறனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பேச்சைக் கேட்டு முன்னாள் சாராயத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மக்கள் பண்பும் மரியாதையும் மிக்கவர்கள் என்றும், தமிழகத்தின் பிற மாவட்ட மக்களைப் போலவே தங்கள் கடின உழைப்பின் மூலம் மாநிலத்துக்கும் நாட்டிற்கும் பொருளாதார பங்களிப்பை அளித்து வருகிறார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவினர் தவிர தமிழக மக்கள் யாரும் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை என்றும், கோபாலபுரக் குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் தயாநிதி மாறனுக்கு இத்தனை ஆணவம் இருந்தால், தங்கள் கடும் உழைப்பால் தமிழகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது திமிர்த்தனமான பேச்சுக்காக தயாநிதி மாறன் உடனடியாக கோயம்புத்தூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், திமுகவினரின் இந்த ஆணவத்தினால்தான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதி மக்களும் திமுகவைப் புறக்கணித்து வருகிறார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு அதே நிலை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.