செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் குறித்து ஆலோசனை
தேசிய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார்.
கடந்த 16ஆம் தேதி தொடங்கிய இந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, வரும் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை அமைப்பாளர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் புதுமைகள் மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டார்.
இந்த சந்திப்பில் கூகுள் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
முன்னதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கு மிகப் பெரிய முன்னேற்றப் பாதையும், அபூர்வமான வாய்ப்புகளும் உள்ளன என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.