கோவை மண்ணில் இனி திமுகவினர் கால்பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன் பேச்சு
இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால்பதிக்க முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டியுள்ளார். கொங்கு மக்களின் மீது தனது வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளதாகவும் நயினார் தெரிவித்துள்ளார்.
அந்த பேச்சை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ரசித்து மகிழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கோபாலபுரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையில் மற்றவர்களும் ஊரைக் கெடுப்பவர்களாகவே தெரிகிறார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலங்காலமாக திமுகவால் முழுமையாக கைப்பற்ற முடியாத கோவை மாவட்டத்தின் மீது உடன்பிறப்புகளுக்கு அதிக ஆத்திரம் இருப்பது இயல்பானதா என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மேலும், தவறான திட்ட அறிக்கை மூலம் கோவை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையை அவதூறாக பேசும் திமுகவினருக்கு இனி கோவை மண்ணில் இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தயாநிதி மாறன் தனது பிளவுவாத பேச்சிற்காக உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



