நகர்மன்ற கூட்டத்தில் திமுக–அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்றத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தின் போது, தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை திட்டத்திற்காக முதல்வருக்கு திமுக கவுன்சிலர் சசிகுமார் நன்றி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர் சம்பூர்ணம், இந்தத் தொகை மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதாகவும், பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதுவரை உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், அனைத்து தகுதியான பெண்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.