பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி
குரும்பா கலை வடிவத்திற்கு மீள்வடிவம் கொடுத்த ஓவியரும், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டவருமான மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குரும்பர் பழங்குடி சமூக ஓவியக் கலைஞர் கிருஷ்ணனுக்கு, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வறுமையில் வாழும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சுசிலாவிற்கு, முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிடப் பழங்குடியின மாதிரிப் பள்ளியில் தோட்டப் பணியாளர் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.