தொடர் தோல்வி எதிரொலி: இந்தியா–பாகிஸ்தான் போட்டிகள் வணிக மதிப்பை இழக்கிறதா?
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் வணிக மதிப்பை இழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியாவின் தொடர்ச்சியான வெற்றிகள், பாகிஸ்தான் அணியை முன்பைவிட கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐ.சி.சி. உடனான மோதல்கள், இந்தியாவுடன் விளையாட விதிக்கப்பட்ட நிபந்தனைகள் போன்ற காரணங்களால், இந்தப் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், சமீபத்திய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சவால் இன்றி சரணடைந்தது விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையிலும் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் கூட இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால், இந்தியா–பாகிஸ்தான் போட்டிகள் ஒருதரப்பாக முடிவடைவதால், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஏமாற்றம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் தௌகிர் ஜியா, இந்த நிலை தொடர்ந்தால் போட்டிகளின் வணிக மதிப்பு குறையும் என எச்சரித்துள்ளார்.
முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக், ரமீஸ் ராஜா உள்ளிட்டோர், தற்போதைய அணியின் ஆட்டத்திறன் மற்றும் போராட்ட மனப்பாங்கு குறைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். 80, 90களில் இந்தியாவுடன் விளையாடிய காலத்தில் இருந்த உற்சாகமும், தைரியமும் இப்போது இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
1999-ல் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியை நினைவுகூர்ந்த சக்லைன் முஷ்டாக், அப்போது இருந்த வெற்றிக் களத்தை தற்போது காண முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
மேலும், கராச்சியில் நடைபெற்ற போட்டி திரையிடலின்போது, பாகிஸ்தான் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தவுடன் பல ரசிகர்கள் வெளியேறியதாக சினிமா அரங்க உரிமையாளர் நதீம் மண்ட்விவாலா தெரிவித்தார்.
கிரிக்கெட் எழுத்தாளர் ஓமைர் அலவி, போட்டிகள் ஒருதரப்பாக முடிவடைவதால் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாக கூறியுள்ளார். போட்டிகள் மீண்டும் போட்டித்தன்மையுடன் நடைபெறாவிட்டால், இந்தியா–பாகிஸ்தான் மோதல்களின் வணிக மதிப்பு மேலும் குறையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால், தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து பாகிஸ்தான் அணி மீண்டு வருமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.