மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பரவிய வதந்தி
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட தொகையை உடனடியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இழக்க நேரிடும் என்றும், இன்று பெறாவிட்டால் அந்தத் தொகை அரசுக்கு திரும்பச் சென்று விடும் என்றும் தகவல் பரவியது.
இதனால் அச்சமடைந்த பெண்கள், அரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் குவிந்தனர். இதன் காரணமாக வங்கியைச் சுற்றி பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்தது.