மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது – பிரவீன் சக்ரவர்த்தி கருத்து
மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்திருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு தொடர்பான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வராத சூழல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி ஆட்சிப் பங்கு குறித்து யாரும் பேசமாட்டார்கள் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், X தளத்தில் பதிவிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த ஒன்பது மாநிலத் தேர்தல்களில் நான்கு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை மட்டும் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என நம்புவது மூடநம்பிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.