காரிமங்கலம் அருகே இரவு பகலாக கனிமவள கொள்ளை: விவசாயிகள் குற்றச்சாட்டு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகளில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாகனம்பட்டி, முக்குலம், பந்தாரஹள்ளி, பெரியம்பட்டி, புலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் டிராக்டர் மற்றும் கர்நாடக பதிவு எண்கள் கொண்ட டிப்பர் லாரிகள் மூலம் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இயற்கை வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்