எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்கும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் பாதுகாப்பு பலம் அதிகரிப்பு
எல்லையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படையை வலுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரஃபேல் விமானம், பிரான்ஸின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது பன்முகத் திறன் கொண்ட போர் விமானமாகும். மணிக்கு 2,223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், வழக்கமான ஏவுகணைகளுடன் அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.
ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ரஃபேல் விமானத்தின் வல்லமையை, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் உலகமே கண்டு வியந்தது.
வரும் 17ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 3.25 லட்சம் கோடி ரூபாய் செலவில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், 18 விமானங்கள் நேரடியாக டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படவுள்ளன. மீதமுள்ள 96 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும், இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் விமானங்கள் விரைவில் சேர உள்ளன. இதன் மூலம் இந்தியாவிடம் உள்ள மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 150 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய விமானப்படையில் சுகோய்-30MKI, மிராஜ் 2000, MiG-29, தேஜஸ் Mk1 மற்றும் ஜாகுவார் வகை விமானப் படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. புதிய ரஃபேல் விமானங்கள் இணைவதன் மூலம் மேலும் ஆறு புதிய படைப்பிரிவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் செயல்பாட்டில் உள்ள படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 29-இல் இருந்து 50 ஆக உயரக்கூடும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் J-20 போர் விமானங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த கொள்முதல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவிலிருந்து ஆறு போஸிடான் P-8I கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களை வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் பத்து ஆண்டுகளில் உலகின் மிக வலிமையான விமானப்படைகளில் இந்தியா முதலிடத்தைப் பெறும் என பாதுகாப்பு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.