காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்து – அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த திமுக பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து
நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவிருந்த திமுக பொதுக்கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தச்சநல்லூர் மற்றும் வீரவநல்லூரில் நடைபெறவிருந்த இந்த பொதுக்கூட்டங்கள், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக பொதுக்கூட்டங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குறிப்பாக கூட்டணி கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் குறித்து அவர் வெளியிட்ட விமர்சனங்கள் பெரும் விவாதத்தை கிளப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக கட்சி தலைமையிடம் புகார்கள் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பனின் பொதுக்கூட்டங்களை ரத்து செய்ய கட்சி தலைமை முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், கட்சி தலைமையிடமிருந்து உடனடியாக வருமாறு அறிவுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது நெல்லை பயணத்தை பாதியிலேயே நிறுத்தி சென்னை திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், திமுக கூட்டணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.