தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், சுமார் 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “1998ஆம் ஆண்டில் தி.நகர் தொகுதியில் 2,08,349 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் 30 ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி, வெறும் 36,656 பேர் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை வேகமாக அதிகரித்தும், வாக்காளர் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது.
அதிமுக ஆதரவாளர்களான சுமார் 13 ஆயிரம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; ஆனால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் தொடர்கின்றன. இதுகுறித்து பல முறை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சரியான ஆய்வுடன் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரினார்.
மனுவை தலைமை நீதிபதி வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, தி.நகர் தொகுதிக்கான ஆவணங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க நேரம் தேவைப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “தமிழகம் உட்பட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் மனுதாரரின் புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும்,” என்று கூறியது.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.