திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணைக்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், எந்நேரமும் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
60 அடி உயரமும், 1.9 டிஎம்சி கொள்ளளவுமுள்ள திருமூர்த்தி அணையில் தற்போது 51 அடி நீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 900 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, அணையிலிருந்து விநாடிக்கு 250 கனஅடி நீர் பிரதான கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.
திருமூர்த்தி அணை மற்றும் சுற்றுவட்டார நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் நீர் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால், பாலாற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையினர் தெரிவித்ததாவது:
“உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து வேகமாக உயர்ந்து வருகிறது. எந்த நேரத்திலும் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பாலாற்றின் கரையோர மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தனர்.