டெல்டா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு – அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தகவல்
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு விரைவாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தின் கருவேலங்கடை, கீழ்வேளுர் வட்டம் சின்னதும்பூர், திருக்குவளை வட்டம் திருவாய்மூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு குறுவை சாகுபடி பரப்பளவு மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், டெல்டாவுக்காக ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குறுவைத் தொகுப்பு வழங்கியதும், வேளாண் துறைக்கு தனித்த பட்ஜெட் அறிமுகப்படுத்தியதும் முக்கிய காரணமாகும்,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான நெல்லு ஊக்கத்தொகையாக ரூ.1,145 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு ரூ.1,959 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அதேபோல், முந்தைய ஆட்சியில் 7.27 லட்சம் டன் நெல்லை சேமிக்கும் கிடங்குகள் கட்டப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் 4.32 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 லட்சம் டன் கொள்ளளவு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மழை பெய்து, தீபாவளி பண்டிகையும் வந்துவிட்டதால் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை நகர்த்துவதில் சிறிய தடைகள் ஏற்பட்டன. ஆனால், தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளன. ஆய்வில் அறுவடைக்கு தயாராக இருந்த 2,550 ஹெக்டேர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. மேலும் 25,610 ஹெக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் சூழப்பட்டுள்ளன. சம்பா நெற்பயிர்கள் மழைநீர் வடிந்தவுடன் மீளச்சாத்தியம் உள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைந்து கணக்கெடுப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின் பின், உரிய நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்,” எனவும் கூறினார்.
அதுடன், “செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. முன்னாள் முதல்வர் அரசியல் நோக்கில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பின்னர், திருவாரூர் மாவட்டம் ரிஷியூர், நார்த்தங்குடி, கொட்டையூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து உள்ளிட்ட இடங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பார்வையிட்டார்.