இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்
வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள 14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகியுள்ளது என சர்வதேச ஹாக்கி சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- ‘A’ பிரிவு: ஜெர்மனி (நடப்பு சாம்பியன்), தென் ஆப்ரிக்கா, கனடா, அயர்லாந்து
- ‘B’ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து
- ‘C’ பிரிவு: அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா
- ‘D’ பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா
- ‘E’ பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா
- ‘F’ பிரிவு: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம்
பாகிஸ்தான் விலகல்:
‘B’ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, “பங்கேற்க முடியாது” என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது. இதன் காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு பதிலாக புதிய அணி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 11வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம், விளையாட்டு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.