உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு
அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில், ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேச்சு ஆற்றினார்.
அவர் கூறியதாவது: “கரோனா பேரிடருக்குப் பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில், உலக பொருளாதார வளர்ச்சியின் புதிய இன்ஜினாக இந்தியா உருவெடுத்துள்ளது. அந்த நாட்டில் பல முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்தியாவில் டிஜிட்டல்மயமாதல் சாத்தியமற்றது என்று ஒருகாலத்தில் உலகம் கருதியது. ஆனால், அந்த கருத்தை இந்தியா முழுமையாக மாற்றி வைத்துள்ளது. ஆதார் அட்டை வழங்கல் மற்றும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% என இருந்த உயர்ந்த வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது,” என்று கூறினார்.
அதே நேரத்தில், “சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை நிலவுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதும், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை உயர்வதும் எதிர்காலத்தில் சவாலாக மாறலாம்,” என கிறிஸ்டலினா ஜார்ஜீவா எச்சரித்தார்.