கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்
கரூரில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பதால் கடந்த 18-ம் தேதி தவெக சார்பில் வங்கிக் கணக்கில் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அனுப்பப்பட்டது.
உள்ளூர் தவெக நிர்வாகிகள் சென்று, “கரூரில் மண்டபம் கிடைக்காததால், விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். பேருந்து வசதி வழங்கினால் வருவீர்களா?” என்று குடும்பத்தினரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
கரூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்தஜோதி (கூட்ட நெரிசலில் மனைவி மற்றும் இரு மகள்களை இழந்தவர்) கூறியதாவது, “தவெக நிர்வாகிகள் சென்று, சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விருப்பப்படுவதாக கூறியுள்ளனர். பார்க்கலாம் என்று பதிலளித்தேன்” என்றார்.