சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
உலக நலனும், மனிதர்களின் உடல் நல மேம்பாடும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், சேலத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் மற்றும் தேசிய சேவா சமிதி இணைந்து ஏற்பாடு செய்த ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இந்த புனித நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர்.
சேலம் மரவநேரி பகுதியில் அமைந்துள்ள தேசிய சேவா சமிதி வளாகத்தில், கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உலக அமைதி மற்றும் மக்கள் ஆரோக்கியத்தை வேண்டி இந்த மகா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டு 25வது ஆண்டாக விழா கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்ச்சி கோமாதா பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு வேத முறைகளின்படி ஹோமங்கள் நடத்தப்பட்டன.
இறுதியாக ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம் சிறப்புற நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மனமுருகி இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். வழிபாடு முடிந்த பின்னர், அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.