பிஎஃப் பணத்தை 100% எடுக்கலாம்: மத்திய அரசு விதிகளை எளிதாக்கியது
மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக முழுமையாக (100%) எடுத்துக்கொள்ள வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 238வது மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இதன் படி, மருத்துவம், கல்வி, திருமணம், வீடு மற்றும் பிற சிறப்பு சூழ்நிலைகளுக்காக இனிமேல் தொழிலாளர்கள் தங்கள் பிஎஃப் சேமிப்பில் இருந்து முழு பணத்தையும் பெற முடியும். இது 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தங்கள் ஓய்வூதியத் தொகையையும் பாதுகாப்பதோடு, சேமிப்பை எளிதில் அணுகுவதற்கும் உதவும்.
முன்னதாக பிஎஃப் பணத்தை திரும்பப் பெற 13 விதிமுறைகள் இருந்தவை; இப்போது அவை ஒரே பிரிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் கல்வி செலவுகளுக்கு முன்பே வரையறுக்கப்பட்ட முறைகளுக்கு மாற்றாக, இப்போது கல்விக்கு 10 முறை, திருமணத்துக்கு 5 முறை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் நிறுவன பங்களிப்பை சேர்த்து தகுதிக்கேற்ப முழு 100% பணத்தை திரும்பப் பெறலாம். சிறிய தொகைகளை எடுக்கும் குறைந்தபட்ச பணிக் காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சூழ்நிலைகளில் பணத்தை எடுப்பதற்காக காரணங்களை விளக்க தேவையில்லை.