51,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்
இன்று நடந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரோஜ்கர் மேலா எனும் வேலைவாய்ப்புத் திருவிழாவில், டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையில் புத்தொளியை கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளை பெறுவது, திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும்” என்று தெரிவித்தார்.
இன்றைய நியமனங்கள் வெறும் அரசு வேலைகள் மட்டுமல்ல; தேசத்தின் கட்டுமானத்திற்கும் பங்களிக்கும் சிறந்த வாய்ப்பாகும். பணிநியமனங்களை பெற்றோர் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்றும், சேவை உணர்வுடன் பணியாற்றுவதை மறக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் இந்திய இளைஞர்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் சக்திவாய்ந்த தளமாகும். அண்மைக் காலங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. “வளர்ச்சியடைந்த இந்தியா” திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பணி சேவை மற்றும் பிரதிபா சேது போர்ட்டல் போன்ற தளங்கள் மூலம் திறமையான இளைஞர்கள் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
புதிய பணியாளர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை புதுவடிவமாக மாற்றுவார்கள்; அவர்களது முயற்சிகள் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.