வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க அறிவாலய தலைவர்கள் முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வட இந்தியர்களை குறிவைத்து வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலான பேச்சுகளை அறிவாலயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “பானிபூரி விற்கவும், கட்டுமான பணிகளுக்கும், மேசை துடைக்கும் வேலைகளுக்கும் தான் வட இந்தியர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்” என இழிவாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இத்தகைய அகந்தையான பேச்சுக்காக, சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக மக்களிடம் வெளிப்படையான மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தின் மூலம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்ன தமிழ் மண்ணில், வட இந்தியர்களுக்கு எதிரான பகை உணர்வை திமுக தலைவர்கள் விதைக்க முயல்வது அருவருப்பானதும், சமூக ஒற்றுமைக்கு ஆபத்தானதுமாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், வடக்கு–தெற்கு என மக்களை இன ரீதியாகப் பிரித்து அரசியல் லாபம் தேடும் திமுகவின் பிளவுவாத செயல்பாடுகளை, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கின்றனவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இமயம் முதல் குமரி வரை” ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் கொண்ட பாரத நாட்டில், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வட இந்திய மக்களை அரசியல் கருவியாக பயன்படுத்த முயலும் திமுக என்ற நச்சுக் கொடியை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அகற்றிவிடுவார்கள் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.