இந்து சமய அறநிலையத் துறைக்கு அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக, கந்தகோட்டம் ஆயிர வைஷ்ய பேரி செட்டியார் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவுகளை மீறி, அறங்காவலர் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் அந்த நடவடிக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு, கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கனவே பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும், இதுவரை எந்தவொரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என கடுமையாக சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, அறநிலையத் துறை நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்தியதாகக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அறங்காவலர் குழுவில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 3 உறுப்பினர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் நீதிபதி தெளிவாக உத்தரவிட்டார்.
அத்துடன், கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் தனிப்பிரிவு தொடர்பான முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.