போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு – சென்னையில் இளம்பெண் தற்கொலை முயற்சி
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில், திருட்டு விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகக் கூறி, ஒரு இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹசினா என்ற பெண், அருகிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருபவர். அவர் வேலை பார்த்த வீட்டில் இருந்து 8 சவரன் தங்க நகைகள் மாயமானதாக, வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஹசினாவை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். நகை திருட்டில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் மறுத்துள்ளார். இருப்பினும், திருட்டை ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மன வேதனையில் இருந்த ஹசினா, தனது வீட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் தீவிர காயமடைந்த அவர், தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.