பள்ளி வளாகத்தில் சாதி அவமதிப்பு – 8ம் வகுப்பு மாணவனை எரியும் குப்பையில் வீசிய கொடூரம்
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், சாதி பெயரை குறிப்பிடித் தாக்கியதில் 8ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், குன்னத்தூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள், அவரை சாதி அடையாளத்தை முன்வைத்து இழிவுபடுத்தி தொடர்ந்து கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இரு மாணவர்களும் சிறுவனின் கை மற்றும் கால்களைப் பிடித்து, எரிந்து கொண்டிருந்த குப்பைத் தொகுதிக்குள் தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொடூரச் செயலால் தீக்காயமடைந்த மாணவர், உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேசிய மாணவனின் தாய், தன் மகனுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பள்ளி ஆசிரியர்களே சில நேரங்களில் தனது மகனை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.