சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடந்த பாத யாத்திரை சோகம் – கார் விபத்தில் 4 பெண்கள் பலி
பெரம்பலூர் மாவட்ட எல்லையில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலுக்கு நடைபயணமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில், நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பதற்காக பாத யாத்திரை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது, எதிர்திசையில் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் மலர்கொடி, விஜயலட்சுமி, சசிகலா மற்றும் சித்ரா ஆகிய நான்கு பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் கடுமையாக காயமடைந்த ஜோதிலட்சுமி, உடனடியாக மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் கெளதமியை காவல்துறையினர் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.