தலைநகரை அதிரவைத்த கொடூர படுகொலைகள் – வடமாநில தொழிலாளர் குடும்பம் சந்தித்த நரக வேதனை
வேலைவாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைநகரிலேயே நிகழ்ந்த இந்த மனிதநேயமற்ற குற்றச் செயல், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூ பகுதியில், இருசக்கர வாகன ஷோரூம் அருகே ரத்தம் கசிந்த நிலையில் கிடந்த ஒரு சாக்கு மூட்டை, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூட்டையில் இருந்த உடல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பவருடையது என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் இரண்டு வயது மகன் பிரம்மினி குமார் எங்கே என்ற தேடல் தீவிரமடைந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கிருஷ்ணபிரகாஷ் என்பவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கவுரவ் குமார் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வேலை தேடி வந்ததும், அடையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலர் பணிக்காக முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது. கிருஷ்ணபிரகாஷின் வழியாக, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் காவலாளியாக பணியாற்றும் சிக்கந்தர் என்பவருடன் கவுரவ் குமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
புதியதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தில் கவுரவ் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் தங்க வைத்த சிக்கந்தர், இரவு நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக விசாரணையில் வெளிவந்துள்ளது.
மனைவியை காப்பாற்ற முயன்ற கவுரவ் குமாரையும் குற்றவாளிகள் தாக்கி கொன்றுள்ளனர். பெற்றோரை இழந்து அழுதுக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையையும் சுவற்றில் அடித்து கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மூவரின் உடல்களையும் தனித்தனியாக சாக்கு மூட்டைகளில் கட்டிய குற்றவாளிகள், குழந்தையின் உடலை மத்திய கைலாஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசியதாகவும், கவுரவ் குமாரின் உடலை திருவான்மியூர் கடலில் வீச இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது, இந்திரா நகர் அருகே அந்த சாக்கு மூட்டை தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அதை மீண்டும் எடுத்துச் செல்ல முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றதாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சிக்கந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் முனிதா குமாரியின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நல்ல வாழ்க்கை என்ற கனவுடன், உழைப்பை நம்பி சென்னைக்கு வந்த ஒரு குடும்பம், வக்கிரமான ஆசைக்கும் மனிதநேயமற்ற வன்முறைக்கும் பலியான இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.