மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்?
மத்திய பட்ஜெட் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட தொழில்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றிய விவரங்கள் இங்கே பார்க்கலாம்.
பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டிற்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் 7 முக்கிய கோரிக்கைகள் கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க கோரிக்கை ஒன்றாக, பிரதமரின் “சூரிய கிரண்” திட்டத்தின் மாதிரி ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கும் 25% மானியம் வழங்க வேண்டும் என்பதாகும். அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளவுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது என்று கோவை தொழில்துறை சங்கத் தலைவர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.
மேலும், CGTMSE திட்டத்தின் கீழ் உற்பத்தித் துறைக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், 25 கோடி ரூபாய் வரை 100% கடன் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75% மட்டுமே உத்தரவாதம் கிடைப்பதால், வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டுகின்றன. இதனால் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு நேரடியாக பாதிக்கப்படுகிறது என்று கூறினார்.
‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தின் கீழ் பழைய விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மாற்ற மானியம் வழங்கி வந்தது, ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பூபதி கூறியதாவது, இதுவரை சுமார் 50% விசைத்தறிகள் மட்டுமே நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மின் கட்டணங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதால், விசைத்தறியாளர்கள் கடுமையான பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, விசைத்தறிக் கூடங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதற்காக மத்திய அரசு 50% மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில் ‘பவர் டெக்ஸ் இந்தியா’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால், விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.