தவறான உறவை எதிர்த்த முதியவர் மீது கொடூர தாக்குதல் – மாமனாரை எரிக்கச் செய்த மருமகள்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, ஒழுங்கீனமான உறவுக்கு தடையாக இருந்த காரணத்தால் மாமனாரை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்மீது தீவைத்து தாக்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் சம்பவத்தை கண்ட அருகிலிருந்த மக்கள் உடனடியாக ராஜேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டிச் சென்ற மணிகண்டன் என்பவருடன் குபேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ராஜேந்திரனின் மருமகள் ஜெயப்பிரியாவுக்கும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டனுக்கும் இடையில் நீண்ட காலமாக தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜேந்திரன் கண்டித்ததால், அவரை அகற்ற திட்டமிட்டு தீவைத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இந்த தகவல்களை ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார், பெண் உட்பட நான்கு பேரை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.