பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பாஜக அயலக தமிழர் பிரிவு ரூ.2 லட்சம் நிவாரணம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு, தமிழக பாஜக அயலக தமிழர் பிரிவு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தன. இதனிடையே பாஜக சார்பில் ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக அயலக தமிழர் பிரிவு சார்பில் கூடுதலாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள காசோலை பூர்ண சந்திரனின் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், அயலக தமிழர் பிரிவு மாநிலத் தலைவர் கே.எம். சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது பேசிய ராம சீனிவாசன், இத்தனை நாட்கள் கடந்தும் திமுகவைச் சேர்ந்த ஒருவர்கூட பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக கூறினார். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்த தமிழக அரசு, பூர்ண சந்திரனின் குடும்பத்தை ஏன் புறக்கணிக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.