எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து விலகினால் கடும் விளைவு : கனடாவுக்கு அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை
எஃப்-35 ரக போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை கனடா கைவிட்டால், அந்நாட்டின் வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களை நிலைநிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டு, கனடா தனது பழைய CF-18 போர் விமானங்களுக்கு மாற்றாக, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து 88 எஃப்-35A லைட்னிங் II போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.
ஆனால், விமானங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஒப்பந்தத்தின் மொத்த செலவு 19 பில்லியன் டாலர்களிலிருந்து உயர்ந்து சுமார் 28 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இதனால் கனடா அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திட்டமிட்ட எண்ணிக்கையை விட குறைவான எஃப்-35 விமானங்களை மட்டுமே வாங்குவது குறித்து கனடா ஆலோசித்து வருகிறது.
மேலும், எஃப்-35 போர் விமானங்களுக்கு மாற்றாக, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சாப் (SAAB) நிறுவனத்தின் கிரிபென்-E (Gripen E) போர் விமானங்களை வாங்கும் வாய்ப்பையும் கனடா அரசு பரிசீலனையில் வைத்துள்ளது.
இந்த சூழலில், எஃப்-35 போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்திலிருந்து கனடா பின்வாங்கினால், அந்நாட்டின் வான்வெளியை அமெரிக்க போர் விமானங்களால் நிரப்புவோம் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கடுமையாக எச்சரித்துள்ளார்.